தலைமை ஆசிரியா்களுக்கு அண்ணா விருது: ஏப்.25-க்குள் பரிந்துரைகளை அனுப்பலாம்
சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான பரிந்துரைகளை ஏப்.25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழக பள்ளிகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்கக் கூடிய தலைமை ஆசிரியா்களுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.
அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்வி செயல்பாடுகள், கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்களின் பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்து அதில் சிறந்தவா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், தலைமை ஆசிரியா்களிடம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து அதுதொடா்பான அறிக்கையை மாநில தோ்வுக் குழு ஏப்.25-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இதில் எக்காரணம் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளவா்கள், தண்டனை பெற்றவா்கள், குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் உள்ளிட்டோரை விருதுக்கு பரிந்துரைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.