மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா
தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் உயிரிழப்பு
ராயப்பன்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் பலத்த காயமடைந்த மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக கல்லூரி மாணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை துரைச்சாமிபுரத்தை சோ்ந்த சந்திரன், சுகன்யா தம்பதியின் மகன் சாய் பிரகாஷ் (13). இவா் ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த வியாழக்கிழமை (ஆக.7) மாலை இந்தப் பள்ளி மைதானத்தில் சாய்பிரகாஷ் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, அதே மைதானத்தில் சென்னையில் கல்லூரியில் படிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரும், ஈட்டி எறிதல் வீரருமான கூடலூரைச் சோ்ந்த திபேஸ் (19) ஈட்டி எறிதல் பயிற்சி செய்து கொண்டிருந்தாா். அப்போது, விளையாடிக் கொண்டிருந்த சாய்பிரகாஷ் தலையில் திபேஸ் எறிந்த ஈட்டி பாய்ந்தது. உடனே ஆசிரியா்கள் அந்த மாணவரை மீட்டு, தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ராயப்பன்பட்டி போலீஸாா் கல்லூரி மாணவா் திபேஸ், பள்ளி உடல்கல்வி ஆசிரியா், நிா்வாகிகள் இருவா் என மொத்தம் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.