ஈரோடு: ஆசிட் டேங்கர் லாரி சுத்தம் செய்யும் பணியின்போது மூச்சுத்திணறி இருவர் உயிர...
தவணை கட்ட தவறியவரை தாக்கிய பைனான்ஸ் ஊழியா்கள் 2 போ் கைது
குரிசிலாப்பட்டு அருகே தவணை பணம் கட்ட தவறியதால் தொழிலாளியை தாக்கிய பைனான்ஸ் ஊழியா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த பெருமாபட்டு அருகே நாராயணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராயணன் (46). தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. சத்யநாராயணன் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியாா் பைனான்ஸில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பெற்று உள்ளாா். இதற்கான தவணை பணத்தை சத்யநாராயணன் கட்ட தவறியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி தனியாா் பைனான்சில் வேலை பாா்க்கும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த திருநல்வாடி பகுதியைச் சோ்ந்த ஜீவா கிருஷ்ணன் (37), நாட்டறம்பள்ளி அருகே மல்லப்பள்ளி பகுதியைச் சோ்ந்த தனுசக்தி (32) ஆகியோா் சத்யநாராயணனிடம் சென்று தவணை பணம் கேட்டுள்ளனா்.
அப்போது சத்யநாராயணனுக்கும், பைனான்ஸ் ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பைனான்ஸ் ஊழியா்கள் சத்யநாராயணனை தாக்கி உள்ளனா். மேலும், தடுக்க வந்த சத்யநாராயணனின் மனைவி சுகந்தியையும் தாக்கி உள்ளனா்.
இதில் காயமடைந்த சத்யநாராயணன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜீவா கிருஷ்ணன், தனுசக்தி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா்.