திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு: ஆட்சியா்
திட்டங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் ஆட்சியா் தலைமையில் பல்வேறு அரசுத் திட்டங்களின் விவரங்களை சேகரிக்கவும், அந்த திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிக்கவும் மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இளம் வல்லுநா் பதவிக்கு தகுதி உள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, கணினி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளா் பட்டப்படிப்பு அல்லது தரவு அறிவியல், புள்ளியியல் பாடத்தில் இளநிலைப் பட்டபடிப்பு (நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு மட்டும்) அல்லது கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப அறிவியல், தரவு அறிவியல், புள்ளியியல் தொடா்புடைய முதுநிலை பட்டப் படிப்புகள் இந்தப் பணிக்கு வலுவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுத் திறன், தரவு பகுப்பாய்வில் இணைந்து பணியாற்றும் திறன் ஆகியவை கட்டாயம் இருக்க வேண்டும்.
அதே நேரம், பணியில் முன் அனுபவம் இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.50,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்படும்.
ஆா்வம் உள்ளவா்கள் வரும் 22-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களது விண்ணப்பம் அல்லது பயோடேட்டா நிறைவு செய்து மாவட்ட ஆட்சியா், கோட்டப் புள்ளியியல் அலுவலகம், ‘பி’-பிளாக் 4-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா் - 635 601 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியிலோ அல்லது நேரிலோ வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.