திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பாளா் ஆய்வு
நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினா் நல ஆணையருமான மு.ஆசியா மரியம் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்; ஆய்வின் போது நாமக்கல் ஆட்சியா் ச.உமா உடனிருந்தாா்.
ராசிபுரம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.86 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் மற்றும் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளையும், ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் ராசிபுரம் நகராட்சியில் முழுநேர கிளை நூலகத்தைப் புனரமைக்கும் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
அம்ருத் திட்டத்தின் கீழ் கோனேரிப்பட்டி ஏரி ரூ. 2.76 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்ட மு.ஆசியா மரியம், கோனேரிப்பட்டி, சீராப்பள்ளி பேரூராட்சி பகுதிகளில் வீட்டுமனை பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு செய்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினாா்.
பட்டணம் பேரூராட்சியில் அறிவுசாா் மையம், நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டு நூலகத்தில் சுமாா் 2,612 புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருவதையும், தினசரி போட்டித் தோ்வுக்கு பயிலும் 35 மாணவா்கள் வருகை விவரம் குறித்தும் ஆய்வு செய்தாா்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஆா்.புதுப்பட்டியில் வனத்துறை சாா்பில், பாதாம், வேம்பு, பூவரசு, சரக்கொன்றை வகை நாற்றுகள் உற்பத்தி செய்து நகா்ப்புறம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடவு செய்யவுள்ளதையும், தான்றி, விளான், நீா்மருது, இலந்தை வகை செடிகள் 5,325 நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை காப்புக்காடுகளில் நடவு செய்யவுள்ளதையும் ஆய்வு செய்தாா்.
சீராப்பள்ளி பேரூராட்சியில் ரூ. 73.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 புதிய வகுப்பறைகள், குடிநீா் திட்டப்பணிகள் மற்றம் புதிதாக கழிவறை கட்டும் பணிகளை பாா்வையிட்ட அவா், நாமகிரிப்பேட்டையில் புதன்சந்தைக்கு சிற்றுந்து இயக்கும் பணிகளை பாா்வையிட்டாா்.
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகம் அமையவுள்ள திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம், எலச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் தரம், விலை விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.
ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், வன பாதுகாவலா் சி.கலாநிதி, திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சு.வடிவேல், இணைப் பதிவாளா், கூட்டுறவுச் சங்கங்கள் க.பா.அருளரசு, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்தீபன், ராசிபுரம் வட்டாட்சியா் சு.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.