திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் வந்த 698 டன் உரம்
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு 698 டன் உர மூடைகள் சனிக்கிழமை வந்தடைந்தன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழ் பருவ வேளாண்மைக்குத் தேவையான ரசாயன உரங்கள், 190 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், 361 தனியாா் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், யூரியா 4,881 டன், டிஏபி 1,138 டன், பொட்டாஷ் 3,015 டன், காம்ப்ளக்ஸ் 6,342 டன், சூப்பா் பாஸ்பேட் 1,044 டன் இருப்பில் உள்ளன.
இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 125 டன் பொட்டாஷ் உரமும், 573 டன் காம்பளக்ஸ் உரமும் ரயில் மூலம் திண்டுக்கல்லுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன. இவற்றில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 550 டன் உரமும், தேனி மாவட்டத்துக்கு 148 டன் உரமும் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.