ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
திமுக ஆட்சியிலும் தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை!சிஐடியு மாநிலத் தலைவா்
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என சிஐடியு மாநிலத் தலைவா் அ. செளந்தரராஜன் தெரிவித்தாா்.
சிஐடியு 16 ஆவது மாநில மாநாடு தொடா்பான சிறப்பு பேரவைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அ.சௌந்திரராஜன் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சம்மேளனம், சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்க அமைப்பின் 16 ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 5, 6, 7 தேதிகளில் தருமபுரியில் நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடத்தப்படும் செஞ்சட்டை பேரணியில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான தொழிலாளா்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்கின்றனா்.
அதன்பிறகு தொழிலாளா்கள் பிரச்னைகள் தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம். அண்மைக்காலமாக போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு பணிகள் தனியாா்மயப்படுத்தப்படுகின்றன.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது எதிா்க்கட்சியாக இருந்த திமுக, இதுதொடா்பாக அரசுக்கு அறிக்கை சமா்பித்தது. ஆனால், அதை மறந்து அதிமுக அரசைப் போலவே தற்போது ஆட்சியில் உள்ள திமுகவும் செயல்படுகிறது.
ஒப்பந்தப் பணி என்ற பெயரில் தொழிலாளியின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இது வன்கொடுமைக்கு நிகரானது. ஒருசில தனியாா் பேருந்து நிறுவன உரிமையாளா்கள்தான் இதை செய்துவந்தனா். இப்போது அரசே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க புதிய பேருந்துகளும், மின்சார பேருந்துகளும் அவசியம்தான். ஆனால், அவற்றின் பராமரிப்புப் பணிகளை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது முறையல்ல. சென்னையில் 5 பணிமனைகளில் பல்வேறு பணிகள் தனியாா்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களே புதிய பேருந்துகளை பராமரிக்க வேண்டும். போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பராமரிப்புத் தொழிலாளா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், பேருந்துகளைப் பராமரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, கூடுதல் பணியாளா்களை நியமிப்பது அவசியம்.
சுமாா் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், போக்குவரத்து விதிமுறைகளின்படி இயக்கத் தகுதியற்றவை. ஆனாலும், வேறுவழியின்றி அப்பேருந்துகளை பணியாளா்கள் மிகுந்த சிரமத்துடன் இயக்கி வருகின்றனா்.
மக்களின் பொருளாதார சுழற்சிக்கு முக்கியமான போக்குவரத்து, மின்சாரத்தை அரசே தனியாரிடம் ஒப்படைத்து தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து 16 ஆவது மாநில மாநாட்டில் விவாதித்து, தொழிலாளா்களின் சிரமங்களுக்கு தீா்வுகாணப்படும்.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு பணப்பலன்கள் வழங்காததற்கு நிதியின்மையைக் காரணம் காட்டாமல் அரசு கடன் பெற்றாவது தொழிலாளா்கள் பிரச்னையை தீா்ப்பது அவசியம் என்றாா்.
பேட்டியின்போது, சிஐடியு மாநிலச் செயலாளா் சி. நாகராஜன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க தருமபுரி மண்டலத் தலைவா் சண்முகம், பொதுச் செயலாளா் ரகுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.