திரிவேணி சங்கமத்தில் 53 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
பிரயக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 53 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாகக் கருதப்படும் மகா கும்பமேளா, உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகின்றது. கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி உள்ளிட்ட முக்கிய ஆறு நாள்களில் திரளான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்தனர். இந்த நிலையில் கும்பமேளா நிறைவடைய 9 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதுவரை சுமார் 53 கோடி பேர் புனித நீராடியுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தலைமையில் முதன் முறையாக நாட்டின் நம்பிக்கைக்கு மரியாதை கிடைத்துள்ளது. 500 ஆண்டுக்கால காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி. 2016-17ஆம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக அரசு இல்லாதபோது, அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 2.35 லட்சமாக இருந்தது ஆனால், 2024ல் இந்த எண்ணிக்கை 14 முதல் 15 கோடிக்கு உயர்ந்துள்ளது
36வது நாளை தொடர்ந்தும் இன்றும் திரிவேணி சங்கமத்தில் நீராடப் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். பிராயக்ராஜ் ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவதால் அதிகப்படியான கூட்டத்தை நிர்வகிக்க காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர் ஜெனரல் ஜி.பி. சிங், பிரயாகராஜின் மகாகும்பமேளாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார், உத்தரப் பிரதேச காவல்துறை, சி.ஆர்.பி.எஃப் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு இருப்பதை அவர் பாராட்டினார்.
ரயில் பயணிகளின் வசதிக்காகவும், மகாகும்பமேளாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மகாகும்பமேளா சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், சனிக்கிழமை புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, பிரயாக்ராஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு 4 சிறப்பு ரயில்களை இயக்குவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.