திருக்கண்ணபுரம் கோயிலில் தங்ககருட சேவை
திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில், மாசிமகப் பெருவிழாவையொட்டி தங்ககருட சேவை சனிக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களுள் 17-ஆவது தலமாக போற்றப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
விழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை காலை பெருமாள் தங்கப் பல்லக்கில் திருமேனி சேவை வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இரவு பெருமாள் தங்ககருட சேவை நடைபெற்றது. தங்ககருட வாகனத்துடன் கூடிய ஓலை சப்பரத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தாா்.
இதில், கோயில் செயல் அலுவலா் குணசேகரன், தக்காா் மணிகண்டன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மாா்ச் 11 -ஆம் தேதி காலை நடைபெறுகிறது. 13-ஆம் தேதி காலை செளரிராஜப் பெருமாள் புறப்பட்டு, திருமருகல் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறாா். அங்கு, வரதராஜப் பெருமாளுடன் சோ்ந்து தீா்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீா்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மாா்ச் 18-ஆம் தேதி இரவு 10 மணிக்கு சௌரிராஜப் பெருமாள் கோயில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் பங்களா தெப்பம் என்ற தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.