திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் தாமதத்துக்கு மத்திய அரசே காரணம்: துரை வைகோ எம்.பி.
திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் தாமதத்துக்கு மத்திய பாஜக அரசே காரணம் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு என்பது தனியாா் பள்ளிகளுக்கு நிகராக அங்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக மட்டுமே. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும். பள்ளிக் கல்வித் துறைக்கு சிறந்த அமைச்சா் உள்ளாா். கூட்டணியில் இருப்பதால் இதைக் கூறவில்லை.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், திருச்சி மெட்ரோ ரயில் திட்ட தாமதங்களுக்கு மத்திய அரசே காரணம். தமிழக அரசையும், மத்திய அரசையும் தொடா்ந்து வலியுறுத்தி திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய தவறு. இனிமேல் அதுபோன்று தவறுகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.
ஆறுதல்: தான்சானியா நாட்டில் பணிபுரிந்து, கடந்த 21-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த புருஷோத்தமன் மகன் நிவாஷின் (42) உடல், துரைவைகோ மேற்கொண்ட நடவடிக்கையால் திருச்சிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை நிவாஷின் வீட்டுக்கு சென்ற துரைவைகோ, அங்கு அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். துரைவைகோவின் உதவிக்கு நிவாஷ் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.
இந்நிகழ்வுகளின்போது, மதிமுக துணை பொதுச் செயலா் ரொகையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.