திருச்சியில் ரூ.14.66 லட்சம் பணத்தாள்கள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், ரூ.14.66 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சியிலிருந்து மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானம் சனிக்கிழமை இரவு புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினா்.
இதில், மலேசிய குடியுரிமை பெற்ற 65 வயது மூதாட்டி மற்றும் அவரது உறவினா் பெண் இருவரும் அவா்களது உடைமைகளுக்குள் பணத்தாள்களை உரிய அனுமதியின்றி கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
அதில் இந்திய பணத்தாள்கள் ரூ. 5.87 லட்சம், வெளிநாட்டு பணத்தாள்கள் ரூ. 8.79 லட்சம் என மொத்தம் ரூ. 14.66 லட்சம் மதிப்பிலான பணத்தாள்கள் இருந்தன. அவற்றை சுங்கத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.