திருச்செந்தூா் குடமுழுக்கு யாகசாலை பூஜைகள்: தருமபுரம் ஆதீனம், அமைச்சா்கள் பங்கேற்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் வியாழக்கிழமை காலை 4 ஆம் கால யாகசாலை பூஜைகளும், மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
இதையொட்டி, கோயில் சண்முகவிலாச மண்டபத்திலிருந்து ஆச்சாா்ய விசேஷ சந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க ஆச்சாரியாா்கள் யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு பூஜைகள் தொடங்கின. திரவ்யாஹுதி, பூா்ணாஹுதி, தீபாராதனையாகி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு (இந்து சமய அறநிலையத் துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (மீன்வளம்- மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை) அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் பழனி, ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, கோயில்கள் ஆகம ஆய்வு கமிட்டித் தலைவா் ஓய்வுபெற்ற நீதியரசா் சொக்கலிங்கம், தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை கோயில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தான்ய வழிபாடுகள், முதன்மைத் திருக்குட வழிபாடு, மூலவா் திருக்குட அபிஷேகம் உள்ளிட்டவையும், 6, 7ஆம் கால யாகசாலை பூஜைகள், கலவை மருந்து சாத்துதல் உள்ளிட்டவையும் நடைபெறும்.
நூல் வெளியீடு: திருச்செந்தூா் கோயில் யாகசாலை முன் ‘திருச்செந்தூா் சுப்பிரமணியக் கடவுள்’ என்ற நூலை தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் வெளியிட, கோயில் தக்காா், பிள்ளையாா்பட்டி பிச்சு குருக்கள், தூத்துக்குடி செல்வம் பட்டா் உள்ளிட்டோா் பெற்றுக்கொண்டனா்.

