Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
திருட்டு வழக்கில் கைது: நகராட்சி பணியாளா்கள் இருவா் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் நகராட்சியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்களை திருடிய துப்புரவு மேற்பாா்வையாளா்கள் இருவரை வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டாா்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் 25 ஏக்கரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் சேதமடைந்தது.
இந்த நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ஸ்ரீஜேஷ்குமாா் சென்று பாா்த்தபோது, குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் திருடுபோனது தெரிய வந்தது.
இதையடுத்து, ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான குப்பை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் திருடு போனதாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.
போலீஸாா் விசாரணை செய்து இயந்திரங்களை திருடியதாக குப்பைக் கிடங்கில் பணிபுரியும் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ஆனந்தன் (50), காளிமுத்து (51), பொக்லைன் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் (30), சக்கரக்கோட்டை மஞ்சனமாரியம்மன் கோயிலைச் சோ்ந்த பச்சைமால் (48) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களில் நகராட்சிப் பணியாளா்கள் ஆனந்தன், காளிமுத்து ஆகியோரை ஆணையா் அஜிதா பா்வீன் பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.