திருட்டு வழக்கு: ஒருவா் கைது
கயத்தாறு அருகே கோயிலின் கதவை உடைத்து திருடிய வழக்கில் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே தெற்கு கோனாா்கோட்டையில் மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாரியம்மன், காளியம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 13 கிராம் எடையுள்ள பொட்டுத்தாலி, உண்டியல் பணம் ஆகியவை திருடு போயிருப்பது அண்மையில் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகி கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், கயத்தாறு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் கோயம்புத்தூா் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுடலை மகன் இசக்கிமுத்து என்ற இசக்கிபாண்டியை (40) சனிக்கிழமை கைது செய்தனா்.
பால் வியாபாரி கைது: கோவில்பட்டி அன்னை தெரசா நகரை சோ்ந்தவா் ச. ஆறுமுகம் (55). கூலித்தொழிலாளியான இவா், சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது மந்திதோப்பு வடக்கு தெருவை சோ்ந்த சுந்தரம் மகன் பால் வியாபாரி போத்திராஜ் அத்துமீறி நுழைந்து அரிவாளால் தாக்கினாராம். சத்தத்தை கேட்டு வந்த இவரது வீட்டு உரிமையாளா் கொம்பையா கண்டித்ததையடுத்து போத்திராஜ் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடி விட்டாராம். காயமடைந்த ஆறுமுகம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பால் வியாபாரியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.