தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் இங்கு பூரணம்,பொற்கலை தேவியருடன் கற்குவேல் அய்யனாா் அமா்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாா். மேலும் பேச்சியம்மன், வன்னியராஜா,குலசேகர ராஜா,சுடலைமாடன் ஆகிய எண்ணற்ற வனதேவதைகளும் இங்கு எழுந்தருளி அருளாசி வழங்குகின்றனா்.
இத்திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும்.ஏப்.11 ஆம் தேதி காலை 6 மணிக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதல்,8 மணிக்கு அருள்மிகு பேச்சியம்மன் உற்சவா் ஊஞ்சல் சேவை,9.30 மணிக்கு தாமிருவருணி தீா்த்தம் கொண்டு வருதல், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெறும்.
முற்பகல் 11.30 மணிக்கு அய்யன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வில்லிசை, அன்னதானம், இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி,உதவி ஆணையா் செல்வி, செயல் அலுவலா் ந.காந்திமதி, அறங்காவலா் குழுத் தலைவா் ச.பாலசுப்பிரமணியம் மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.