திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலய இணையதளம் மூலம் செலுத்திய கட்டணத்திற்கு தங்களுக்கு அர்ச்சனை பிரசாதம் வரவில்லை என சுப்பிரமணியம் என்பவர் ஆலயத்திற்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.
அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்ட நபர் பெயரில் கோவிலுக்கு இணையதளம் மூலம் எந்தக் கட்டணமும் செலுத்தப்படவில்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து அந்த நபர் அளித்த அர்ச்சனைக்கான விபரங்களை அடங்கிய ரசீதை பார்த்தபோது அதில் போலியான இணையதள முகவரி இருப்பது தெரிய வந்தது.
இதேபோன்று பல்வேறு பக்தர்களிடமிருந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் ஆலய பெயரில் போலி இணையதளம் மூலம் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளதாக திருநள்ளாறு கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் பேரில் திருநள்ளாறு கோவில் இணையதளம் போன்று போலி இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்தது.
இதனை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த ஜனனி பரத் என்ற நபர் மற்றும் போலி இணையதளத்தை சென்னையை சேர்ந்த ஒரு நபருடன் இணைந்து நிர்வகித்து வந்தது தெரிய வந்தது. மேலும் பெங்களூரை சேர்ந்த ஜனனி பரத் போலி இணையதளம் மூலம் பெறப்படும் கட்டணத்திற்கு திருநள்ளாறு கோவிலைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் குருக்கள் என்ற நபர் மூலம், இவர்கள் அளிக்கும் முகவரிக்கு கோவில் மூலமாக வழங்கப்படுவது போன்று அர்ச்சனைக்கான பிரசாதங்களை அனுப்பி வைத்து வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ஜனனி பரத் மற்றும் திருநள்ளாறு சன்னதி தெருவைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் குருக்களை திருநள்ளாறு போலீசார் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.