சாராய விற்பனையைத் தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை
மயிலாடுதுறையில் சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இளைஞர்களை சாராய வியாபாரிகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, சாராயம் விற்பனை செய்து வந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
இருப்பினும், ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், மீண்டும் சாராய விற்பனையைத் தொடங்கினார். தொடர்ந்து, தெருவில் சாராயம் விற்பது குறித்து தட்டிக் கேட்ட சிறுவன் ஒருவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிஷ், ஹரிசக்தி என்ற இளைஞர்கள் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தனும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இளைஞர்கள் இருவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க:இபிஎஸ்ஸின் குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்: முதல்வர் ஸ்டாலின்
உயிரிழந்த ஹரிஷ் பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடியவர் என்றும், ஹரிசக்தி பொறியியல் மாணவர் என்றும் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்ததுடன், உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவமனையில் காவல்துறையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, இளைஞர்களை படுகொலை செய்த மூவரில் ராஜ்குமார், தங்கதுரை இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சாராய வியாபாரத்தை காவல்துறையினர் தடுக்காமல், சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கையும் விடுத்தனர்.