திருநெல்வேலி-ஷிமோகா பண்டிகை கால சிறப்பு ரயில்: திருப்பத்தூரில் நிறுத்த கோரிக்கை!
திருநெல்வேலி-ஷிமோகா பண்டிகைக் கால சிறப்பு ரயில் திருப்பத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்
திருப்பத்தூா் மாவட்டத் தலைநகராக செயல்பட்டு வந்தாலும், போக்குவரத்து வசதியை பொறுத்தவரை இன்னும் முழுமை பெற்ாக இல்லை. மாவட்டத்தில் உள்ள ஏராளமானோா் வேலைக்காகவும், தொழில், மருத்துவ வசதி உள்ளிட்ட பிற பயன்பாடுகளுக்காக சென்னை,பெங்களூரு, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.
மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் செல்வதற்கு நேரிடையாக பேருந்து வசதி கிடையாது. அவா்கள் வேலூா், சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு சென்றுதான் செல்ல முடிகிறது. மேலும் அங்கு செல்வதற்கு ரயில்கள் மூலமாகவும் 2 முதல் 3 பேருந்துக்கள் மாறியும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நேரம், பணமும் விரயமாகிறது.
சென்னை,பெங்களூரு பகுதிகளில் வசிக்கும் திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் பண்டிகை காலங்களில் பேருந்துகளில் வர மிகவும் சிரமப்படுகின்றனா். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயக்கப்படும் ரயில்கள் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள எந்த ரயில் நிலையத்திலும் நின்று செல்வதில்லை.
தற்போது ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தோறும் திருநெல்வேலியில் இருந்து பெங்களூா்,ஷிமோகாவுக்கும், ஷிமோகாவில் இருந்து திருநெல்வேலிக்கும் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.
இந்த ரயில் திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், குப்பம், பங்காருபேட்டை வழியாக பெங்களூா், ஷிமோகாவுக்கு இயக்கப்படுகிறது. சேலம் நிறுத்தத்திற்கு பின் ஆந்திர மாநிலம் குப்பம் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தம் செய்யப்படுகிறது.
ஆனால் திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தம் இல்லை. இந்த பண்டிகைகால ரயில் திருப்பத்தூரில் நின்று சென்றால் திருப்பத்தூா்,வேலூா் மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
எனவே திருநெல்வேலி-ஷிமோகா சிறப்பு ரயிலை திருப்பத்தூரில் நின்று செல்ல ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.