கடம்பூரில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிப்பு
திருப்பதி லட்டு விவகாரம்: பல்வேறு முறைகேடுகள் அம்பலம்! திண்டுக்கல் நிறுவன உரிமையாளர் கைது!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில் சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் அம்பலமாகியுள்ளன.
திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதையும் படிக்க : தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
முந்தைய ஆட்சியில் திருப்பதி ‘லட்டு’ தயாரிப்புக்கு கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நயயுடு எழுப்பிய குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், இக்குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ இயக்குநரின் மேற்பாா்வையில் 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
போலி ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம்
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், தனியாா் பால் நிறுவனங்களுக்குத் தொடா்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின், அபூா்வா சாவ்டா, ராஜசேகரன் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதில், ராஜசேகரன் என்பவர் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின்போது நெய் விநியோகித்ததில் பெரும் முறைகேட்டில் தனியார் பால் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் பால் நிறுவனத்தின் ஆவணங்களை பயன்படுத்தி, போலி ஆவணங்கள் தயாரித்து வைஸ்ணவி என்ற நிறுவனம் நெய் விநியோகிக்க ஒப்பந்தத்தை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உத்தரகண்ட் மாநில ரூர்க்கியில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படுவதாகவும் வைஸ்ணவி நிறுவனம் போலி ஆவணத்தை தயாரித்துள்ளது.
இதனடிப்படையில், மூன்று நிறுவனங்களைச் சேர்ந்த 4 பேரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.