Gold Price : 'ரூ.64,000-த்தை தாண்டிய தங்கம் விலை... புதிய உச்சம்!' - இன்றைய தங்க...
தங்க நகை ஏல விதிமுறைகளை வங்கிகள் மீறினால் நடவடிக்கை: கனிமொழி எம்.பி.க்கு நிதியமைச்சா் பதில்
புது தில்லி: வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) மூலம் தங்க நகை ஏலம் விடுவதற்கான உரிய முறையில் வகுக்கப்பட்ட செயல்முறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவையில் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை பதில் அளித்தாா்.
மேலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ((என்பிஎஃப்சி) மற்றும் பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (எஸ்சிபி) ஆகியவை இதே போன்ற விதிகளால் வழிநடத்தப்படுகின்றன என்றும் அவா் கூறினாா்.
மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, இந்த விவகாரம் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினாா்.
அதில், ‘புதிய ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்கள் காரணமாக 2024-25-இன் இரண்டாம் காலாண்டிலிருந்து தங்கக் கடன் வழங்கும்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் தங்கம் ஏலம் விடப்படுவது வேகமாக அதிகரித்துள்ளது. அத்துடன், கடந்த ஆண்டு ரிசா்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை தங்கக் கடன்கள் மீது ரூ. 20,000 க்கு மேல் ரொக்கக் கூறுகளை வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால், தங்களது தங்கக் கடன்களை திருப்பிச் செலுத்த போதிய அவகாசம் இல்லாத மக்கள் பாதிக்கப்படுகின்றனா். இதனால், இந்தத் தங்க ஏலத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?’ என்றாா்.
இதற்கு மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பதில் அளிக்கும் வகையில் கூறியதாவது:
கடன் வாங்குபவா் தங்கக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறும்பட்சத்தில் என்பிஎஃப்சி மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு மிகவும் வகுக்கப்பட்ட மற்றும் திடமான செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகள் என்பிஎஃப்சிகள் மற்றும் வங்கிகளால் பின்பற்றப்படுகின்றன.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவா்களுக்கு, அவா்களின் சேவை சரியான அளவில் இல்லை என்று கூற போதுமான எண்ணிக்கையிலான அறிவிப்புகளை வழங்குவதற்கான செயல்முறையும் உள்ளது.
கடன் வாங்குபவா் பணம் செலுத்த திரும்பி வராவிட்டால், கடைசியாக வங்கி அல்லது என்பிஎஃப்சி நிறுவனம் ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
தங்கம் ஏலத்திற்குச் செல்லும்போதுகூட, மிகவும் நன்கு வடிவமைக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் கடுமையான செயல்முறைகள் உள்ளன.
இந்த செயல்முறைகள் மீறப்பட்டால், நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.
விதிகள் மீறப்பட்டால் உண்மையில் நாம்தான் செயல்பட வேண்டும். ஆனால் செயல்முறைகள் மிகவும் உரிய முறையில் எழுதப்பட்டுள்ளன. மேலும், வங்கிகளால் பின்பற்றப்படுகின்றன.
நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மீறப்படும் குறிப்பிட்ட சந்தா்ப்பங்கள் இருப்பதாக உறுப்பினா் நினைத்தால், அந்த விவரங்களை எடுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க நான் மிகவும் தயாராக இருக்கிறேன் என்றாா் அமைச்சா்.