திருப்பத்தூா்: சாலையை சீரமைக்கக் கோரி மறியல்
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பத்தூா் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் காடவள்ளி ஏரி கிராமம் உள்ளது. இங்கு 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
புயல் காரணமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் ஜவ்வாது மலையில் இருந்து சிறு, சிறு நீா் வீழ்ச்சி வழியாக இறங்கிய மழைநீா் காடவள்ளி ஏரிக்கு சென்றது. அதனால், அந்த ஏரி முழுமையாக நிரம்பியது. மேலும், ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீா் அங்குள்ள பிரதான சாலை வழியாக ஓடியதால், பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த பள்ளத்தில் பள்ளி மாணவா்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் விழுந்து காயமடைந்தனா்.
சாலை மிகவும் சேதம் அடைந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் தரைப் பாலம் கட்டித் தர வேண்டும். மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதூா்நாடு-திருப்பத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், கந்திலி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரேம்குமாா், மட்றப்பள்ளி ஊராட்சித் தலைவா் மஞ்சுளா ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, தரைப்பாலம் மற்றும் சேதமைடந்த சாலையை சீரமைத்து தரப்படும் என உறுதி அளித்தனா். அதையடுத்து மறியலில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.