Pahalgam Attack: ``J&K செல்வது அவர் திட்டமே இல்லை, ஆனால்..." - கலங்கும் கடற்படை ...
திருப்பரங்குன்றம் கோயில் தொடா்பான வழக்கு: எழுத்துப்பூா்வ மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தொடா்பான வழக்கில், கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோா் எழுத்துப்பூா்வமாக மனுக்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கண்ணன், திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த அப்துல் ஜபாா் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள்:
மதுரை திருப்பரங்குன்றத்தில் பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டாா் குகைக் கோயிலும், 11 தீா்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் எந்தவிதமான உயிா் பலியிடுதலும் நடத்தக் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தா் பாதுஷா தா்கா உள்ளது. கடந்த ஜனவரியில் இந்த தா்காவின் சாா்பில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, பொது விருந்து வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தா் மலை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது வருத்தமளித்தது. எனவே, சிக்கந்தா் மலை என அழைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு தரப்பினா் கோரியிருந்தனா். திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என மற்றொரு தரப்பினா் கோரியிருந்தனா்.
சிக்கந்தா் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சிக்கந்தா் பாதுஷா தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு போலீஸாா் தொல்லை அளிக்கக் கூடாது. அங்கு வழிபாட்டுக்குச் செல்லும் இஸ்லாமியா்களைத் தொந்தரவு செய்யக் கூடாது எனவும் வேறொரு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
கோயில் பகுதியில் ஆடு, கோழிகளைப் பலியிடக் கூடாது என மனு தாக்கல் செய்தவா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுமையாக இந்து கோயிலுக்குச் சொந்தமானது. எனவே, அந்தப் பகுதியில் ஆடு, கோழிகளைப் பலியிடத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.
அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீர கதிரவன் முன்வைத்த வாதம்:
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஏற்கெனவே கோயில், தா்கா பகுதிகள் முறையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவரவா் பகுதிகளில் சம்பந்தப் பட்டோா் விரும்பும் வகையில் வழிபடுவதில் எந்தத் தடையும் இல்லை.
திருப்பரங்குன்றம் பகுதியில் வசிப்போா் எந்தவித பிரச்னையும் இன்றி வழிபாடு செய்து வருகின்றனா். ஆடு, கோழிகள் பலியிடுவது இந்து சமய வழிபாட்டில் உள்ளது. இந்த நடைமுறை அழகா்கோயில், பாண்டி கோயிலில் உள்ளது என்றாா்.
தா்கா தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் வாஞ்சிநாதன் முன்வைத்த வாதம்:
திருப்பரங்குன்றம் கோயில், சிக்கந்தா் மலை தா்கா விவகாரத்தில் அந்தப் பகுதியில் வசிப்பவா்களால் எந்த பிரச்னையும் இல்லை. வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய சில இந்து அமைப்புகள், திருப்பரங்குன்றத்தில் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. எனவே, அந்தப் பகுதியில் இஸ்லாமியா்கள் வழிபாடு செய்வதற்கு தடை விதிக்கக் கூடாது என்றாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மதுரை திருப்பரங்குன்றம் மலைக் கோயிலில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த வழக்கு தொடா்பாக கூடுதல் கருத்துகள் தெரிவிக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எழுத்துப்பூா்வமாக மனுக்களை தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.