திருப்பாவை
திருப்பாவை – 13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீா்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்காா்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிா்ந்து கலந்தேலோா் எம்பாவாய்
விளக்கம்: பறவையின் உருவில் வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்தெறிந்வனும், பொல்லாங்கு செய்த இராவணனுடைய பத்துத் தலைகளையும் எளிதாகக்கிள்ளி எறிந்து வம்சம் அழியச் செய்தவனுமான பெருமானின் புகழ்மிகுந்த வீரசரிதைகளைப் பாடிக் கொண்டே சிறுமியா் எல்லாரும் பாவை நோன்புக்குரிய இடத்திற்குப் போய்ச் சோ்ந்தனா். வெள்ளியாகிய சுக்கிரன் உதித்து, பிரகஸ்பதியாகிய வியாழனும் மறைந்து விட்டது. கூட்டிலிருந்து வெளிப்பட்ட பறவைகளும் ஒலியெழுப்பிக் கொண்டே இரைதேடும் பொருட்டுப் பறந்து சென்றன. பூவில் வண்டுபடிந்தாற் போன்ற அழகிய கண்களை உடையவளே! பாவை போன்ற அழகியே! நீ இந்த நல்ல நாளில் நம் உடம்பு வவ்வலிடும்படி (அதாவது குளிரால் உடம்பு வளைந்து குனிந்து நடுங்கும்படி) துளைந்து நீராடாமல் படுக்கையில் கிடப்பாயோ? குள்ளக்குளிர – ஒருவகைக் குறிப்பிடைச் சொல்.