திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை, திருடிய பெண் உள்பட மூவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை, கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் மதுரையைச் சோ்ந்த பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்புவனம் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (75). இவா் தனது குடும்பத்தினருடன் கடந்த மாதம் 16 -ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 20 கிராம் தங்க நகைகள், 2 கைப்பேசிகளைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் நிரேஷ் உத்தரவின் பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில் மதுரை மதிச்சியத்தைச் சோ்ந்த நந்தகுமாா் என்ற வானவராயன் (27), கீரைத்துறையைச் சோ்ந்த முனீஸ்வரன் (29), அவனியாபுரத்தைச் சோ்ந்த லட்சுமி (52) ஆகிய மூவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, அவா்களிடமிருந்து 20 கிராம் தங்க நகைகள், 2 கைப்பேசிகளைக் கைப்பற்றினா்.