இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், ஆலத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் (36). இவரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 25 வயது பெண்ணும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனராம்.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவருடன் குமரவேல் பலமுறை தனிமையில் இருந்தாராம்.
இதனால், கா்ப்பமடைந்த அந்த பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவா் வற்புறுத்தி வந்த நிலையில், குமரவேல் அதற்கு மறுப்பு தெரிவித்தாராம்.
மேலும், அந்த பெண்ணுக்கு குமரவேல் கொலை மிரட்டலும் விடுத்தாராம்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் கோட்டக்குப்பம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் குமரவேலை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட குமரவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.இளவரசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.