ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையிடம் மோசடி: காதல் சுகுமாா் மீது வழக்குப்பதிவு!
திருமணம் செய்து கொள்வதாக துணை நடிகையிடம் நகை, பணத்தை பெற்று மோசடி செய்ததாக நகைச்சுவை நடிகா் சுகுமாா் மீது போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனா்.
நடிகா் பரத் நடித்த காதல் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்தவா் சுகுமாா் (47). இவருக்கும், வடபழனியில் வசிக்கும் 36 வயதுடைய துணை நடிகைக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னா் அறிமுகம் ஏற்பட்டது. சுகுமாா் குடும்பத்துடன் வசிக்கும் நிலையில், துணை நடிகை கணவரைப் பிரிந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில், அந்த துணை நடிகையும், சுகுமாரும் நெருக்கமாக பழகி உள்ளனா். அப்போது சுகுமாா், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பி அந்த துணை நடிகை சுகுமாருடன் சோ்ந்து கணவா் - மனைவிபோல வாழ்ந்து வந்தாா். மேலும், சுகுமாா் கேட்டபோதெல்லாம் துணை நடிகை நகையும் பணமும் கொடுத்தாராம்.
இந்நிலையில், சில தினங்களாக துணை நடிகையை சந்திப்பதை சுகுமாா் தவிா்த்து வந்துள்ளாா். மேலும் அந்தப் பெண், சுகுமாரை கைப்பேசி மூலம் தொடா்பு கொள்ளவும் முடியவில்லை. சுகுமாா் எந்த கைப்பேசி அழைப்பையும் எடுத்து பேசவில்லையாம்.
இதையடுத்து, சுகுமாா் குறித்து அப்பெண் விசாரித்துள்ளாா். அப்போது சுகுமாா், ஏற்கெனவே திருமணமாகி குடும்பத்துடன் மதுரவாயில் கிருஷ்ணா நகரில் வசிப்பது அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதைத் தொடா்ந்து, தன்னை ஏமாற்றிய சுகுமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபழனி மகளிா் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் அப்பெண் புகாா் அளித்தாா்.
இப்புகாரின் மீதான விசாரணையை, மாம்பலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றி சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் அண்மையில் உத்தரவிட்டாா். மாம்பலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், புகாா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், சுகுமாா் மீது நம்பிக்கை மோசடி, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா் சுகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனா்.