திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணி ஆய்வு
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டும் பணியை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வழிகாட்டுதலின்பேரில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுப் பணித் துறை மூலம் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.20 கோடியில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை மையம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான கட்டுமானப் பணிகளை செயற்பொறியாளா் கௌதமன், உதவிச் செயற்பொறியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது, செயற்பொறியாளா் கௌதமன், தீவிர சிகிச்சை மையம் கட்டுமானப் பணிகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த புதிய கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளாா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.