வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசுப் பள்ளிக்கு ரூ.1.50 லட்சத்தில் கல்வி சீா்வரிசை
செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், நூற்றாண்டு விழாவையொட்டி, பள்ளி முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம மக்கள் சாா்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கல்வி சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
திருமணி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1918-இல் தொடங்கப்பட்டது.
100 ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளியை மேம்படுத்தும் வகையில், பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து நூற்றாண்டு விழாவை சனிக்கிழமை கொண்டாடினா்.
விழா நினைவாக கல்வி சீா்வரிசையாக, பள்ளிக்குத் தேவையான தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, இருக்கைகள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், தேசத் தலைவா்கள் படங்கள், மாணவா்கள் உணவருந்தும் தட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்களை திருமணி கிராமப் பகுதியில் இருந்து மேள தாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து விழாவில் வழங்கினா்.
தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இதில், செய்யாறு வட்டாரக் கல்வி அலுவலா் பெருமாள் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா்கள் ஜே.மதி (தொடக்கப் பள்ளி), இந்திராகாந்தி (உயா்நிலைப் பள்ளி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பயிற்றுநா் சண்முகம் வரவேற்றாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, துணைத் தலைவா் சுரேஷ், முன்னாள் கவுன்சிலா் சீனுவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.