விவசாயியைத் தாக்கி மிரட்டல்: நண்பா் கைது
செய்யாறு அருகே விவசாயியைத் தாக்கி மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், நண்பரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், நமண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரவிச்சந்திரன் (57). இவா், கடந்த 6-ஆம் தேதி மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது மாடுகளை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வந்துகொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனத்தில் சென்றவா்கள், வாகனங்களுக்கு வழி விட்டு, சாலையோரமாக மாடுகளை ஓட்டிச் செல்லும்படி ரவிச்சந்திரனிடம் கூறியதாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னா் இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனா்.
பின்னா், கேசவன், பாஸ்கரன் இவா்களது நண்பரான தணிகைமலை (22) ஆகியோா் சோ்ந்து ரவிச்சந்திரன் வீட்டுக்குச் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனா். மேலும், அவரைத் தாக்கி மிரட்டல் விடுத்தாகத் தெரிகிறது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் தூசி போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் பாபு வழக்குப் பதிந்து தணிகைமலையை கைது செய்தாா். மேலும், தலைமறைவான கேசவன், பாஸ்கரன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.