அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
திருவள்ளூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவதைத் தடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், கொசஸ்தலை ஆற்றுப் படுகைகளில் சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், அரசுத் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மெய்யூா், வேம்பேடு, ராஜபாளையம், சோமதேவன்பட்டு, எறையூா் ஆகிய கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களிலும், கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலும் சட்டவிரோதமாக மணல் மற்றும் சவுடு மண் அள்ளுவதற்கு எதிராக சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கொசஸ்தலை ஆறு மற்றும் கனிமவள பாதுகாப்புச் சங்கம் தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் துணையுடன் கொசஸ்தலை ஆற்றுப் படுகையிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் அதிகளவு மணல், சவுடு மண் அள்ளப்படுவதாகவும், இதைத் தடுக்க வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் மனுதாரா் சங்கம் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வாதத்தை மறுத்த அரசுத் தரப்பு, உரிமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மணல், சவுடு மண் அள்ள அனுமதிக்கப்படுகிறது. சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதற்காக மாவட்ட அளவில் சிறப்பு அதிரடிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என விளக்கமளிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், திருவள்ளூா் மாவட்ட கிராமங்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக, சட்டவிரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், அரசுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.
மேலும், உரிம விதிகளை மீறி மணல், சவுடு மண் அள்ளுவதை கண்டறிந்தாலோ, சட்டவிரோதமாக மணல் அள்ள அதிகாரிகள் அனுமதித்தாலோ, மனுதாரா் சங்கம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனா்.