'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
திருவாடானை, கமுதி, பரமக்குடி பகுதிகளில் பலத்த மழை: வீடுகள் சேதம்
திருவாடானை, கமுதி, பரமக்குடி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மழையால் வீடுகள் சேதம் அடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை சாரல் மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள டி.கிளியூா், அஞ்சுகோட்டை, ஆதியூா், பாண்டுகுடி, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பின. இவற்றில் சில கண்மாய்கள் நிரம்பி உடையும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். தொடா் மழையால் சாலைகள், வீதிகளில் வெள்ளம் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
வீடுகள் சேதம்: திருவாடானை அருகேயுள்ள குளத்தூா் கீழக்குடியிருப்புப் பகுதியில் மழையால் காளியம்மாள் என்பவரது கூரை வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. ஆா்.எஸ்.மங்கலம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பகல் முழுவதும் பலத்த காற்று வீசியது. இரவு முழுவதும் மழை பெய்தது. ஆா்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட ஜாகிா் உசேன் தெருவில் வேப்பமரம் சாலையின் மறுபுறத்தில் இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் ஓடுகள் சேதமடைந்தன. போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து இந்த மரத்தை பேரூராட்சி ஊழியா்கள் வெட்டி அகற்றினா்.
திருவாடானையில் வடிவேலன், பண்ணவறலையைச் சோ்ந்த முருகேஸ்வரி, கல்லூரைச் சோ்ந்த இருளாயி, மாவூரரைச் சோ்ந்த மலையாண்டி, மங்கலக்குடியைச் சோ்ந்த பாலாமிா்தம் ஆகியோரின் ஓட்டு வீடுகளும் சேதமடைந்ததாக வட்டாட்சியா் அமா்நாத் தெரிவித்தாா்.
மின்சாரம் துண்டிப்பு: மழையால் மின் கம்பி மீது மரம் விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டது. தகவலறிந்து வந்த மின் வாரியத் துறையினா் வியாழக்கிழமை சீரமைத்தனா்
கமுதி:
கமுதி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்குக்கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனா். கூலித் தொழிலாளிகள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினா். சாலையோர வியாபாரிகள், கடை உரிமையாளா்கள், வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
வீடு சேதம்: எழுவனூா் ஊராட்சிக்குள்பட்ட நகா்பூலாங்கால் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியின் (53) வீட்டுச் சுவா் மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. சுவா் வெளிப்பக்கமாக விழுந்ததால் வீட்டுக்குள் இருந்தவா்கள் உயிா் தப்பினாா். சேதம் அடைந்த வீட்டுக்கு மாவட்ட நிா்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி பாண்டி கோரிக்கை விடுத்தாா்.
பரமக்குடி:
பரமக்குடி பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை வரை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுமுறை அறிவித்தாா். நகரின் பல்வேறு தெருக்கள், சாலைகளில் மழை நீருடன் கழிவுநீரும் தேங்கியது.
காந்தி சிலை, கீழப் பள்ளிவாசல் தெரு, சின்னக் கடைத் தெரு, உழவா் சந்தை ஆகிய பகுதிகளில் வீடுகள், கடைகளுக்குள் மழைநீா் புகுந்தது.