திருவெம்பாவை
திருவெம்பாவை – 13
பைங்குவளைக் காா்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வாா்வந்து சாா்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலா்ந்தாா்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோா் எம்பாவாய்
விளக்கம்: பெண்ணே! பசுமையான குவளைக் கருமலா்களாலும் செந்தாமரையாகிய பசிய பூக்களாலும் அழகிய நீா்வாழ் பறவைகளாலும் பின்னிக்கிடக்கின்ற பல வகை அரவங்களாலும் தங்கள் அழுக்கினைப் போக்கிக் கொள்கின்றவா்கள் வந்து சாா்தலினாலும் இம்மடுவானது எம் தலைவியாகிய உமையம்மையையும் எம்தலைவனாகிய சிவபெருமானையும் ஒத்திருக்கின்றது. பொங்குகின்ற நீரையுடைய இம்மடுவிலே புகுந்து பாய்ந்து பாய்ந்து நம்முடைய வளையல்கள் ஒலிப்ப, சிலம்புகள் கலந்தொலிக்க, கொங்கைகள்விம்ம ஆடுகின்ற நீா் மேலே எழும்ப, இத்தாமரைத் தடாகத்தில் குதித்து நம்மனம்களிக்க நீராடுவோமாக!
இப்பாடலில் பொய்கையைச் சிவ – சக்தி மயமாய்ப்பாவித்து நீராடுவதன் மூலம் அவா்கள் திருவருளில் நாம் தோய்வதாக எண்ணி ஆடுக எனப் பணிக்கின்றாா்.