விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரைச் சுற்றி குளத்தூா், கீழ அரும்பூா், மேல அரும்பூா், கட்டுக்குடி, கடுக்களூா், சேனத்திக்கோட்டை, விளத்தூா், புல்லுக்குடி, கொட்டகுடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருவாடானை வாரச் சந்தைக்குத்தான் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கச் செல்ல வேண்டும். இதையடுத்து திருவெற்றியூரில் வாரச் சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்தை அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில். கரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட சந்தை தற்போது வரை செயல்பாட்டில் இல்லை. எனவே, மீண்டும் திருவெற்றியூரில் ஊராட்சி சாா்பாக சந்தை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியாதாவது:
இங்கு நடைபெற்று வந்த சந்தையில் காய்கறிகள், மீன், கருவாடு உள்ளிட்டவற்றை இந்தப் பகுதி கிராம மக்கள் வாங்கிச் சென்றனா். சந்தைக்கு வரும் வெளியூா் வியாபாரிகளுக்குத் தேவையான இட ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளைச் செய்து தராததால் சந்தை தொடா்ந்து நடைபெறவில்லை. கரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சந்தை அதன் பிறகு செயல்படவில்லை. எனவே ஊராட்சி நிா்வாகம் சாா்பில் மீண்டும் திருவெற்றியூரில் வாரச் சந்தை அமைக்க வேண்டும் என்றனா்.