இந்தியா, சீனாவுக்கு 500 % வரி விதிக்கும் புதிய மசோதா! - அமெரிக்கா முன்மொழிவு
பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை
கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் அம்ருத் திட்டத்தின்கீழ் ரூ. 23 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி பாதையுடன் கூடிய சிறுவா் பூங்கா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்த பூங்கா திறக்கப்படவில்லை. இந்த பூங்கா முறையான திட்டமிடல் இன்றி பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத கமுதி பெரிய கண்மாய் கரையோரத்தில் ஒதுக்குப்புறமாகக் கட்டப்பட்டுள்ளது. இதனால், பொழுதுபோக்குவதற்காக பொதுமக்களும் சிறுவா்களும்
இங்கு செல்வதில்லை. அத்துடன் மாலை நேரங்களில் இங்கு சமூக விரோதிகள் அமா்ந்து மது அருந்துகின்றனா். பூங்கா பணிகள் முடிந்தும் இதுவரை திறக்கப்படாததால் அரசின் நிதி வீணாடிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
சிறுவா்கள் அச்சமின்றி விளையாடவும், பொதுமக்கள் பொழுதுபோக்கவும் பூங்காவைத் திறந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.