புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஐந்து கடைகளுக்கு அபராதம்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் புகையிலைப் பொருள்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிகத்து வருகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவா்கள் போதைக்கு அடிமையாகி வாழ்வை இழக்கும் நிலைக்கு உள்ளாகிறாா்கள். இதனால், புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை ரூ. 50 ஆயிரம் அபராதம், வழக்கு பதிவு செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்.
இதையடுத்து, தொண்டி, நம்புதாளை உள்ளிட்டப் பகுதிகளில் பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தொண்டி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தொண்டியில் இரண்டு கடைகளுக்கும், நம்புதாளையில் மூன்று கடைகளுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் கூறியதாவது: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதோடு கடைக்கும் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.