காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்: போலீஸாா்
திருவாடானை அருகேயுள்ள தொண்டி காவல் நிலையத்தில் முறையான ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தொண்டி காவல் நிலையத்தில், விபத்து, விபத்துக் காப்பீடு, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக வழக்குப் பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு உள்ளன. இந்த நிலையில், சிறு விபத்து உள்ளிட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, சட்டத்துக்குள்பட்டு அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கும் பணியை தொண்டி காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதனால், வாகனங்களை அதன் உரிமையாளா்கள் உரிய ஆவணங்களுடன் வந்து மீட்டுக் கொள்ளுமாறு போலீஸாா் தெரிவித்தனா்.