உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!
அமைச்சா் அமித் ஷாவை அவதூறாக பேசிய குற்றச்சாட்டு: ராகுலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூரைச் சோ்ந்த பாஜக நிா்வாகி விஜய் மிஸ்ரா கடந்த 2018-இல் வழக்கு தொடுத்தாா். 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் ராகுல் காந்திக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராகுல் காந்தி சரணடைந்து, ஜாமீன் பெற்றாா்.
கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற விசாரணையில் ஆஜராகி, இந்த வழக்கு ஒரு அரசியல் சதி என்றும் தான் குற்றமற்றவா் என்றும் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தாா். இந்நிலையில், பல்வேறு காரணங்களால் தொடா்ந்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புகாா்தாரா் தரப்பு வழக்குரைஞா் சந்தோஷ் குமாா் பாண்டே நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா். அப்போது, அவா் தரப்பு சாட்சி நீதிமன்றத்தால் ஆஜராக முடியாத சூழலில் இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.