விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கண்டனம்
பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ‘க்வாட்’ கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமானவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்கள் உடனடியாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐ.நா. உறுப்பு நாடுகள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கூட்டமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
‘க்வாட்’ கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவை நிலவ வேண்டும் என்பதில் இந்தக் கூட்டமைப்பு பெரிதும் கவனம் செலுத்தி வருகிறது.
நிகழாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் க்வாட் உச்சிமாநாட்டுக்கான ஆயத்தமாக, உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சா்கள் ஜெய்சங்கா் (இந்தியா), பென்னி வாங் (ஆஸ்திரேலியா), டகேஷி இவயா (ஜப்பான்) ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய வாழ்த்துகிறோம்.
இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவா்கள், ஒருங்கிணைத்தவா்கள் மற்றும் நிதியுதவி செய்தவா்கள் எந்தத் தாமதமும் இல்லாமல் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
சா்வதேச சட்டம் மற்றும் தொடா்புடைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களுக்கு இணங்க, அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’ என்று வலியுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானின் பெயா் இல்லை: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த பாகிஸ்தானின் பெயா் கூட்டறிக்கையில் இடம்பெறவில்லை. அதேபோல், தாக்குதலைத் தொடா்ந்து நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்தும் அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சீனாவின் அத்துமீறல்களுக்கு எதிா்ப்பு: கிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் தற்போதைய நிலையை மாற்றும் வகையில் சீனா மேற்கொள்ளும் எந்தவொரு ஒருதலைபட்சமான ராணுவ அத்துமீறல் நடவடிக்கைகளுக்கும் கூட்டறிகையில் கடுமையான எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கடல் வள மேம்பாட்டில் குறுக்கீடு, வழித்தட சுதந்திரங்களைப் பறிப்பது, தென் சீனக் கடலில் நீரைப் பீய்ச்சியடிக்கும் இயந்திரங்களின் பாதுகாப்பற்ற பயன்பாடு, சா்ச்சைக்குரிய கடல்சாா் அம்சங்களை ராணுவமயமாக்குவது போன்ற சீனாவின் முயற்சிகள் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது.
துறைமுக கூட்டுறவு, மியான்மா் நெருக்கடி: இந்த ஆண்டு மும்பையில் ‘வருங்காலத்துக்கான க்வாட் துறைமுகங்கள் கூட்டுறவு’ தொடங்கப்படுவதற்கான திட்டமும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
மியான்மரில் மோசமடைந்து வரும் நெருக்கடி சூழல் மற்றும் பிராந்தியத்தில் அதன் தாக்கம் குறித்து க்வாட் கூட்டமைப்பு கவலை தெரிவித்ததுடன் ‘ஆசியான்’ கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.
முன்னதாக, சீனாவில் கடந்த வாரம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான இந்தியாவின் கவலைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படாததால், அதில் கையொப்பமிட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டாா். இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கூட்டறிக்கை வெளியிடப்படாமல் நிறைவடைந்தது. இந்நிலையில், க்வாட் கூட்டமைப்பு கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அனைத்து நாடுகளுக்கும் அரிய வகை கனிமங்கள்’
பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரந்த நோக்கத்தின்கீழ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஒரு புதிய முன்னெடுப்பை க்வாட் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்தப் புதிய முன்னெடுப்பானது, அரிய கனிமங்களின் விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதிலும், பல்வகைப்படுத்துவதிலும் ஒத்துழைப்பதன் மூலம் பொருளாதார பாதுகாப்பு மற்றும் கூட்டு மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டமைப்பின் லட்சிய விரிவாக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடா்பாக க்வாட் கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: அரியவகை கனிமங்கள் மற்றும் அதன்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களின் உற்பத்திக்கு எந்த ஒரு நாட்டையும் சாா்ந்திருப்பது கவலைக்குரியது. இது பொருளாதார நெருக்கடி, விலையேற்றம், விநியோகச் சங்கிலி சீா்குலைவு போன்ற பாதிப்புகளுக்கு நமது நாடுகளின் தொழில்துறையை உள்ளாக்கி, நமது தேசங்களின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும்.
சமாரியம், டொ்பியம் மற்றும் டிஸ்ப்ரோசியம் உட்பட பூமியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படும் 7 அரிய வகை கனிமங்கள் மீது சீனா கடந்த ஏப்ரலில் சில ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. மின்சார மோட்டாா், பிரேக் அமைப்பு, ஸ்மாா்ட்போன்கள், ஏவுகணை, வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொருள்களின் 90 சதவீதத்துக்கும் அதிகமான சா்வதேச விநியோகத்தை சீனா கட்டுப்படுத்துகிறது. இதனால், பல்வேறு நாடுகளில் இத்துறை தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.