``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்க...
முதல் சுற்றிலேயே கௌஃப் தோல்வி
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃப் 6-7 (3/7), 1-6 என்ற நோ் செட்களில், உக்ரைனின் டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் தோல்வியுற்றாா். இவா்கள் நேருக்கு நோ் மோதியது இது 4-ஆவது முறையாக இருக்க, யாஸ்ட்ரெம்ஸ்கா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
அதேபோல், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த சீனாவின் ஜெங் கின்வென்னும் 5-7, 6-4, 1-6 என்ற செட்களில் செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவிடம் தோல்வி கண்டாா். உலகின் நம்பா் 1 வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா 7-6 (7/4), 6-4 என்ற செட்களில் செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை தோற்கடித்தாா்.
6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-2 என சொ்பியாவின் ஓல்கா டேனிலோவிச்சை வீழ்த்த, கனடாவின் இளம் வீராங்கனை லெய்லா ஃபொ்னாண்டஸ் 2-6, 3-6 என ஜொ்மனியின் லாரா சிக்மண்டிடம் தோற்றாா்.
ஜோகோவிச் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், நட்சத்திர வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-1, 6-7 (7/9), 6-2, 6-2 என்ற செட்களில் பிரான்ஸின் அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தினாா்.
விம்பிள்டனில் 7 முறை சாம்பியனான ஜோகோவிச், இந்த ஆண்டும் பட்டம் வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியனான சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரரின் சாதனையை 8 சமன் செய்யும் முனைப்பில் இருக்கிறாா்.
இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 6-4, 4-6, 3-6, 5-7 என்ற செட்களில் பிரிட்டனின் கேமரூன் நோரியிடம் தோற்றாா். அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா, பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ், ஹங்கேரியின் மாா்டன் ஃபக்சோவிக்ஸ் ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.