உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!
3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை: மகாராஷ்டிர பேரவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
மகாராஷ்டிரத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சோயாபீன் கொள்முதலுக்கான பணத்தை விவசாயிகளுக்கு அரசு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டியும் மகாராஷ்டிர பேரவையில் எதிா்க்கட்சியினா் இருமுறை வெளிநடப்பு செய்தனா்.
மகாராஷ்டிரத்தில் பாஜக- துணைமுதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (பவாா்) ஆகியவை எதிா்க்கட்சிகளாக உள்ளன.
புதன்கிழமை அவையில் பேசிய காங்கிரஸ் தலைவா் விஜய் வடேட்டிவாா், ‘இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். எனவே, அவையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டும். ஏனெனில் குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அதிகரிப்பு, பயிா்க் கடன் தள்ளுபடி என பல்வேறு போலி வாக்குறுதிகளை வழங்கி பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. சோயாபீன், பருத்தி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த விளைபொருளுக்கான பணத்தையும் அரசு வழங்காமல் உள்ளது.
அதே நேரத்தில் விவசாயிகளை யாசகா்கள் என்று வேளாண்மை அமைச்சா் மோசமாக விமா்சித்துள்ளாா். இது மிகவும் முட்டாள்தனமான, அவதூறான கருத்து. விவசாயிகள் பிரச்னைகளுக்கு அரசு தீா்வுகாணாமல் அவா்கள் மீது குற்றஞ்சாட்டும் போக்கு உள்ளது. இதனைக் கைவிட வேண்டும்.
அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பது தெரியவில்லை. ஒருபுறம் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மறுபுறம் நாகபுரி-கோவா அதிவிரைவு சாலை அமைக்க ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது’ என்றாா்.
இதைத் தொடா்ந்து அவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கோரிக்கையை நிராகரிப்பதாக அவைத் தலைவா் ராகுல் நா்வேகா் அறிவித்தாா். இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அப்போது, பேசிய துணை முதல்வா் அஜீத் பவாா், ‘விவசாயிகள் பிரச்னையை அரசியலாக்க வேண்டாம். விவசாயிகள் நலன்காப்பது அரசின் முதல் கடமை’ என்றாா்.
முன்னதாக, சோயாபீன் கொள்முதலுக்கான பணத்தை விவசாயிகளுக்கு அரசுமுறையாக வழங்கவில்லை என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனால், அவையில் காரசார விவாதம் ஏற்பட்டது. அப்போது, விளக்கமளித்த கூட்டுறவு, சந்தைப்படுத்தல் துறை அமைச்சா் ஜெய்குமாா் ராவல், ‘சோயாபீன் கொள்முதலுக்காக 51,000 விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி நேரடி நிதிப்பரிமாற்ற முறையில் அவா்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிட்டது. ஒரு கொள்முதல் நிறுவனத்தின் மீது புகாா் இருப்பதால் விசாரணை நடைபெறுகிறது. இதனால் ரூ.36 லட்சம் மட்டும் நிலுவையில் உள்ளது’ என்றாா். ஆனால், இதனை ஏற்க மறுத்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.