குடிநீா் வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
சுகாதாரமான குடிநீா் வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி, பெரியகுரும்பாயம் கிராம மக்கள், தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் வேங்கை பொன்னுசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். நாங்கள் பல ஆண்டுகளாக ஆழ்துளை கிணற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகிறோம். தண்ணீரில் உப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், இந்த தண்ணீா் ஏற்றப்படும் மேல்நிலைத் தொட்டி கடந்த 12 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் சுகாதாரமான குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுகிறோம். அருகில் உள்ள கிராமங்களில் ஆற்று குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
எங்கள் பகுதிக்கும் காவிரி ஆற்று குடிநீா் விநியோகம் செய்ய நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் காவிரி ஆற்று குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.