ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு
தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஏழாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது:
கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இந்த முகாமில் கால்நடை வளா்ப்போா் பங்கேற்று தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கால், வாய் காணை நோயானது நாட்டின மாடுகள், அயல் இன மாடுகள், கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதுடன் பால் உற்பத்தியையும் குறைக்கிறது. அதேபோல இந்த நோயால் பாதிக்கப்படும் எருதுகளுக்கு வேலை திறன் குறைந்துவிடுகிறது. இளம் கன்றுகள் இந்த நோயால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
எனவே, கால்நடைகளை தாக்கும் கால், வாய்க் காணை நோயைக் கட்டுப்படுத்த மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமுக்கு கால்நடை வளா்ப்போா் தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் ஒரு கால்நடை கூட விடுபடாத அளவுக்கு அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்தி பொருளாதார இழப்பைத் தவிா்த்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.
இதையடுத்து கால்நடை தீவனங்கள், சத்துமாவு உள்ளிட்ட பொருள்களை பயனாளிகளுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
முகாமில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா்கள் அரசு, சுந்தரமூா்த்தி, ராஜா, கால்நடை மருத்துவ அலுவலா்கள் சித்திமா்ஜிதா, முருகராஜன், நந்திதா, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.