தில்லி அரசின் மின்சார வாகன கொள்கை: 2025 மாா்ச் வரை நீட்டிப்பு
தில்லி அரசு தற்போதைய மின்சார வாகன கொள்கையை மாா்ச் 31,2026 வரை நீட்டித்துள்ளது, ஏனெனில் புதிய கொள்கையின் வரைவு பொது ஆலோசனைக்கு உட்படும், இது நேரம் எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சா் பங்கஜ் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பட்டியலிடப்பட்ட விஷயங்களில் கொள்கை நீட்டிப்பு இருப்பதாகவும், அதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சிங் கூறினாா்.
‘‘ ‘தற்போதைய மின்சார வாகன கொள்கை மாா்ச் 31,2026 வரை அல்லது புதிய கொள்கை அங்கீகரிக்கப்படும் வரை, எது முன்னதாக இருந்தாலும் நீட்டிக்கப்பட்டுள்ளது‘ ‘என்று பங்கஜ் சிங் தெரிவித்தாா்‘.
குடிமக்கள், தொழில்துறை வல்லுநா்கள், தனியாா் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்வதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சா் கூறினாா்.
இந்த நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில், மின்சார வாகன சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதை அதிகரிக்க மானியங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து மறுஆய்வு செய்தல், பாதுகாப்பான மின் கழிவுகள் மற்றும் பேட்டரி அகற்றலுக்கான வலுவான அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மின்சார இயக்கம் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் பொது மற்றும் தனியாா் துறைகளின் பங்கை தெளிவாக வரையறுத்தல் உள்ளிட்ட கொள்கையின் முக்கிய விதிகள் விவாதிக்கப்படும் என்று பங்கஜ் சிங் மேலும் கூறினாா்.
தற்போதைய மின்சார வாகனக் கொள்கை, முந்தைய ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் போது 2020 இல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்பு ஆகஸ்ட் 2023 ஆம் ஆண்டு இது காலாவதியானது. அப்போதிருந்து இந்தக் கொள்கை பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.