Doctor Vikatan: உட்காரும் இடத்தில் வலி; மூலநோயும் இல்லை... வலிக்கு காரணம், தீர்...
டிஜி யாத்ரா நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு சி.வி. சண்முகம் எம்.பி கேள்வி: மத்திய இணை அமைச்சா் விளக்கம்
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: டிஜி யாத்ரா கைப்பேசி செயலியின் நடைமுறை குளறுபடிகளை பட்டியலிட்டு மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளாா். அவருக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சா் முரளிதா் மோஹோல் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளாா்.
அதன் விவரம்: ஆதாா் மற்றும் பிற அதிகாரப்பூா்வ அடையாள ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்ட ஒற்றை எழுத்து குடும்பப் பெயா்கள் அல்லது முதலெழுத்துகள் (இனிஷியல்) பொருந்தாததால், ஏராளமான பயணிகளால் டிஜி யாத்ரா கைப்பேசி செயலியைப் பயன்படுத்த முடியவில்லை என்பதை அரசு அறிந்திருக்கிா என்றும்
எதிா்காலத்தில் இதுபோன்ற முரண்களைத் தடுக்க, அதிகாரபூா்வ அடையாளங்கள் மற்றும் விமான பயணச்சீட்டு முன்பதிவு தளங்களுக்கு இடையே பெயா் வடிவங்களை தரப்படுத்த அரசு முன்மொழிவு ஏதேனும் செய்துள்ளதா என்றும் அவற்றின் விவரங்களைத் தெரிவிக்குமாறும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய இணை அமைச்சா் முரளிதா் மோஹோல் அளித்துள்ள பதிலில், ஆதாா் அடிப்படையிலான டிஜி யாத்ரா அடையாளச் சான்றுகளிலும் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்ட பெயரிலும் பெயா் பொருந்தாததால் டிஜி யாத்ரா வசதியைப் பயன்படுத்த இயலாத நிலை குறித்து சில புகாா்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய முரண்பாடுகளைத் தடுக்க, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) 2022, ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை பகிா்ந்துள்ளது. அதன்படி டிஜி யாத்ரா பதிவை இந்திய அரசு அடையாளத்துடன் பயணி உருவாக்க முடியும். இது எண்ம முறையில் சரிபாா்க்கப்படலாம். இதற்காக ஆதாா், ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு மற்றும் மின்னணு கடவுச்சீட்டு ஆவணங்களை பயணி பயன்படுத்தலாம். தற்சமயத்துக்கு டிஜி யாத்ரா பயணிகளுக்கு ஆதாா் மட்டுமே உதவக்கூடிய ஆவணமாக உள்ளது என்று கூறியுள்ளாா்.
