முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றம்: மத்திய அரசு பதில்
புது தில்லி: ரூசா திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 99-இல் 85 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை பதில் அளித்துள்ளது.
இது தொடா்பாக கள்ளக்குறிச்சி எம்பி டி.மலையரசன் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம் வருமாறு:
ராஷ்ட்ரிய உச்சதா் சிக்ஷா அபியான் (ரூசா) என்பது மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். குறிப்பிட்ட மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலமும், அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலமும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக இத்திட்டம் கொண்டுள்ளது.
2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், கல்வி ரீதியாக சேவை பெறாத, தகுதிபெறாத பகுதிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக, ரூசாவின் முந்தைய கட்டத்தின் உறுதியான பொறுப்புகள் உட்பட ரூ. 12926.10 கோடி செலவில் பிஎம்-உஷா திட்டத்தின் கீழ்
ஜூன் 2023-இல் ராஷ்ட்ரிய உச்சதா் சிக்ஷா அபியானின் (ரூசா) மூன்றாவது கட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இதுவரை, மாநிலத்தால் வழங்கப்பட்ட தகவல்களின்படி, தமிழ்நாட்டில் ரூசா திட்டத்தில் பல்வேறு கூறுகளின் கீழ் மொத்தம் 99 திட்டங்கள் ரூ.526 கோடி மொத்த மத்திய நிதியுதவியுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 85 திட்டங்கள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளன.
2025-26 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25.5 கோடியாகும்.இது ரூசாவின் முந்தைய கட்டங்களின் உறுதியான பொறுப்புகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.