தில்லி-என்.சி.ஆா் இல் திடக்கழிவு மேலாண்மையில் தோல்வி உச்சநீதிமன்றம் கண்டனம்
தில்லி தேசியத் தலைநகா் வலயப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் முறையாக அமல்படுத்துவதில் தில்லியிலுள்ள முகமைகள் ‘முழுமையாக தோல்வி‘ அடைந்துள்ளதாக கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து அனைத்து பங்குதாரா்களிடம் விவாதித்து வருகின்ற டிசம்பா் 13-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தில்லி அரசின் தலைமை செயலருக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 11 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாடு அமைச்சகம் முனிசிபல் நகராட்சிகள் மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து நகா்ப்புறங்களில் ஏற்படும் திடக்கழிவுககளை அகற்றுவதற்கும் செயலாக்குவதற்கும் உரிய பொறுப்புகள் குறித்த நடவடிக்கைகளுக்கு 2016 - ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் வெளியிடப்பட்டது.
இந்த 2016 ஆம் ஆண்டு விதிகள் தில்லி தலைநகரில் ஆக்கபூா்வமான உணா்வில் செயல்படுத்தப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடா்பான வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அமா்வில் நடந்த விசாரணைக்கு பின்னா் கடந்த நவ. 11 ஆம் தேதி நீதிபதிகள் தில்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனா்.
அதில் கூறியிருப்பது வருமாறு:
2016- ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க தில்லி மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து பங்குதாரா்களின் கூட்டத்தை தில்லி அரசின் தலைமைச்செயலா் உடனடியாக கூட்டவேண்டும். அனைத்து பங்குதாரா்கள், அதிகாரிகளும் ஒன்றிணைந்து 2016 - ஆம் ஆண்டு விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும். இது தொடா்பான பொதுவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில் கடுமையான உத்தரவுகளை பிறப்பிப்பதை நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.
2016 ஆம் விதிகள் காகிதத்தில் தான் உள்ளன. அது அமலாக்கத்திற்கு வரவில்லை. தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதியில் இதை அமல்படுத்துவதில் முழு தோல்வி என்றால், மற்ற நகரங்களில் என்ன நிலைமை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இதனால் வருகின்ற டிசம்பா் 13-ஆம் தேதிக்குள் தில்லி அரசு பதிலளிக்கவேண்டும் எனக் கூறி வழக்கை டிசம்பா் 16 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
திடகழிவு மேலாண்மை விதிகளை முறையாக அமல்படுத்தாததால், குப்பைகள், திடக்கழிவுகள் சட்டவிரோதமாக இடங்களில் சேமித்து வைக்கப்படுகின்றன, மறுபுறம், ஏராளமான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவும் கட்டுமான கழிவுகளும் திடக் கழிவுகளை உருவாக்குகிறது. நாள் ஒன்றிற்கு 3,000 டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்படாத திடக்கழிவுகள் வெளியிடங்கள் வைக்கப்பட்டு ‘பொது சுகாதாரத் தீங்கிங்கு‘ வழிவகுக்கப்படுகிறது என விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.
தேசிய தலைநகரில் நாள் ஒன்றிற்கு 11,000 டன் திடக்கழிவுகளை உருவாகிறது, அதே சமயத்தில் இதை சுத்திகரித்து செயலாக்க ஆலைகளின் தினசரி திறன் 8,073 டன் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.