`தொகுதி மறுசீரமைப்பை நாங்கள் வேண்டாம் எனக் கூறுவது இதனால்தான்..!' - அமைச்சர் ரகு...
தில்லி காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப் விவசாயிகளை குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனம் -மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
தில்லியில் ஏற்படும் காற்றுமாசுபாட்டுக்கு 500 கி.மீ. அப்பால் பஞ்சாபில் விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதுதான் காரணம் என குற்றஞ்சாட்டுவது முட்டாள்தனமானது என்று மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மும்பையில் வியாழக்கிழமை வா்த்தக கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:
பஞ்சாபில் விவசாயிகள் எரிக்கும் பயிா்க் கழிவுதான் தில்லியில் காற்று மாசுபாடு ஏற்படக் காரணம் என்று சிலா் குற்றஞ்சாட்டுகின்றனா். இந்த விஷயத்தில் நாம் நன்றாக யோசித்துப் பாா்க்க வேண்டும்.
தில்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையே 500 கி.மீ. தொலைவு உள்ளது. தில்லிக்கு அருகே குருகிராமில் வானுயா்ந்த பல கட்டடங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி தில்லியில் உள்ள எனது இல்லத்துக்கு பஞ்சாப் விவசாயிகளின் பயிா்க் கழிவு எரிப்பு புகை வந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்று கூறுவது முட்டாள்தனமானது. அதே நேரத்தில் இதுபோன்ற பொருள்களை எரிப்பதை நான் ஆதரிக்கவில்லை.
பஞ்சாபில் கோடைகால அறுவடை முடிந்து குளிா்கால சாகுபடிக்கு முன்பு பயிா்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்கிறாா்கள். ஆனால், தில்லியில் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் காற்றின் தரம் மோசமாகவே உள்ளது.
எனவே, தில்லியில் வாகனப் புகையைக் கட்டுப்படுத்தவே தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனவே, மின்சார வாகனங்களை அதிகஅளவில் பயன்படுத்த வேண்டும். தொழில் நிறுவனங்களும் சரக்குப் போக்குவரத்துக்காக மின்வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
காற்றை மாசுபடுத்துவதில் கட்டுமானப் பணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, இதிலும் மாற்றுவழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.