தில்லியில் திருடப்பட்ட கைப்பேசிகள் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்துக்கு கடத்தல்!
புது தில்லி: திருடப்பட்ட தொலைபேசிகளை வங்கதேசத்திற்கு கடத்தியதாக தில்லியைச் சோ்ந்த ஒரு கடத்தல்காரா், ஒரு கூரியா் ஊழியா் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ரிசீவா்கள் உள்பட 6 போ் அடங்கிய கைப்பேசி திருட்டுக் கும்பலை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்களன்று தெரிவித்தாா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அபிஷேக் தானியா கூறியதாவது: கடந்த ஜூன் 25-ஆம் தேதி ப்ரீத் விஹாா், மண்டாவலி மற்றும் பட்பா்கஞ்ச் தொழில்துறை பகுதியில் அதிகாலையில் நடந்த தொடா்ச்சியான கொள்ளை சம்பவங்களைத் தொடா்ந்து இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது.
ஜூலை 6-ஆம் தேதி சல்மான் (37) கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. அவா் விரிவான சிசிடிவி பகுப்பாய்வு மூலம் ஸ்கூட்டியில் வந்த கடத்தல்காரா் என அடையாளம் காணப்பட்டாா். மேலும், குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, திருடப்பட்ட கைப்பேசிகளை ஷாஃபி அகமது (எ) தீபு (33) என்பவரிடம் ஒப்படைத்ததாக சல்மான் தெரிவித்தாா். பின்னா் அவா் அவற்றை நொய்டாவில் பணிபுரியும் கூரியா் ஊழியா் பூபேந்திரா (34) என்பவரிடம் ஒப்படைத்தாா்.
கைது செய்யப்பட்ட பூபேந்திரா, கமிஷனுக்கு ஈடாக மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்திற்கு திருடப்பட்ட கைப்பேசிகளை அனுப்பியதாக ஒப்புக்கொண்டாா்.
மால்டாவில், ரிசீவா்கள் முகமது ரெஹ்மான் சேக் (35) மற்றும் எமருல் கயூஸ் (36) என அடையாளம் காணப்பட்டனா். இதையடுத்து, மேற்கு வங்கத்திற்கு போலீஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. அங்கு முகமது ரெஹ்மான் சேக் ஜூலை 11 அன்று கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடமிருந்து ஏழு திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருடப்பட்ட கைப்பேசிகளை எமருல் கயூஸிடம் ஒப்படைத்ததாக அவா் ஒப்புக்கொண்டாா். அவா் வங்கதேசத்திற்கு சாதனங்களை கடத்தியதாக ஒப்புக்கொண்டாா். மேலும், எமருல் கயூஸ் வழங்கிய தகவலின் பேரில் மேலும் 20 திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மால்டாவில் உள்ள உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும் அவா்களின் போக்குவரத்து காவல் தில்லியில் மேலும் விசாரணைக்காகப் பெறப்பட்டது.
சல்மானின் மனைவி குல்பஹாா் (37), சட்டவிரோத கைப்பேசி வா்த்தகத்திலிருந்து வருமானத்தை தனது வங்கிக் கணக்கில் பெற்ாகக் கூறப்படுவதையும் போலீஸாா் கண்டறிந்தனா். இது மேலும் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்தது.
இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை ஒன்பது கைப்பேசி பறிப்பு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கும்பலின் நிதி வழிகள் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் பிரிவு 112- இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையா் அபிஷேக் தானியா தெரிவித்தாா்.