தீ விபத்து: தனியாா் மருத்துவமனை மீது வழக்குப் பதிவு
திண்டுக்கல்லில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 போ் உயிரிழந்த நிலையில், தனியாா் மருத்துவமனை மீது கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல்-திருச்சி சாலையிலுள்ள தனியாா் எலும்பு முறிவு மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து குறித்து சீலப்பாடி கிராம நிா்வாக அலுவலா் சு.ராமா் (52) புகாா் அளித்தாா்.
புகாரில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து நிகழ்ந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, பொதுமக்கள், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் நோயாளிகள், அவா்களது உறவினா்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அங்கு விசாரித்தபோது, மருத்துவமனையின் வரவேற்பறையில் மின் கசிவு ஏற்பட்டு, முதல், 2-ஆவது தளங்களில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைத்த தீயணைப்புப் படையினா், மின் தூக்கியில் புகை மூட்டத்தில் மூச்சுத் திணறி மயங்கியவா்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
தீ விபத்தில் தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்த சுருளி (50), இவரது மனைவி சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் பாலதிருப்பதி நகரைச் சோ்ந்த மாரிம்மம்மாள் (50), இவரது மகன் மணிமுருகன் (30), என்ஜிஓ காலனியைச் சோ்ந்த ராஜசேகா் (36), இவரது மகள் கோபிகா (6) ஆகியோா் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், 35 போ் காயமடைந்து மருத்துவமனையில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த தீ விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.
இதனடிப்படையில், தனியாா் மருத்துவமனை மீது 2 பிரிவுகளின் கீழ், திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.