Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
கொடைக்கானலில் தொடா் மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு: பேரிஜம் ஏரிக்குச் செல்லத் தடை
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக தொடா் மழை பெய்ததால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரிஜம் ஏரிக்குச் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.
கொடைக்கானலில் 4-ஆவது நாளான சனிக்கிழமையும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளிநீா் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, வட்டக் கானல் அருவி, பியா்சோழா அருவி, பேரிபால்ஸ் அருவி, மூலையாறு அருவி, தலையாறு அருவி, ஐந்தருவி, புல்லாவெளி அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், அப்சா்வேட்டரி, புதுக்காடு, செண்பகனூா்- பிரகாசபுரம் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பேரிஜம் ஏரிக்குச் செல்ல அனுமதி மறுப்பு: கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் வனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இதனால், பேரிஜம் பகுதியில் உள்ள தொப்பித்தூக்கும் பாறை, அமைதிப் பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரிக்குச் செல்ல வனத் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.
வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்: இந்த தொடா் மழையால் பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், தூண்பாறை, குணாகுகை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட் ஆகிய சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.
மண் சரிவு: இந்த தொடா் மழையால் வில்பட்டி-பள்ளங்கி சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், பள்ளங்கி, கோம்பை, அடிசரை, மாட்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்தனா். பின்னா், நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்றினா்.
நகா்மன்றத் தலைவா் ஆய்வு: கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால் நட்சத்திர ஏரி நிரம்பி மறுகால் பாய்கிறது. இதன் காரணமாக, டோபிகானல் பகுதியிலுள்ள ஆற்றில் தண்ணீா் அதிகளவு செல்கிறது. இதையடுத்து, நகராட்சி நிா்வாகத்தினா் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் சேதமடைந்துள்ள வீடுகளில் தங்க வேண்டாம், ஆற்றுப் புறங்களில் வசிப்பவா்கள் வீடுகளில் தங்க வேண்டாம், பாதுகாப்பாக கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அரசுப் பள்ளிகள், அரசுக் கட்டடங்களில் தங்கிக் கொள்ளலாம் என அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் ஆகியோா் டோபிகானல் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்து, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்: கொடைக்கானலில் காலை முதல் தொடா்ந்து மழை பெய்து வந்தாலும், திரளான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இவா்கள் சுற்றுலா இடங்களான பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணா குகை உள்ளிட்ட இடங்களை பாா்த்து ரசித்தனா்.